×

மக்கள் குறை தீர்நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு தென்காசி கலெக்டர் ஆபீசில் பெண் உள்பட மூவர் தீக்குளிக்க முயற்சி-போலீசார் தடுத்துநிறுத்தினர்

தென்காசி : தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன்  வந்த மூவர்  தீக்குளிக்க முயன்றனர். சமயோசிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக தடுத்துநிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. புதிதாக உருவான தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அந்தவகையில் நேற்று வந்த செங்கோட்டை அடுத்த வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் விவேகானந்தன், ஆலங்குளம் அருகே துத்திகுளத்தைச் சேர்ந்த சுப்புகனியின் மகன் முத்துமாரி, மேலும் வால்பாறையை புதுப்பாடியைச் சேர்ந்த பூவலிங்கத்தின் மனைவி தனம் ஆகிய மூவரும் மண்ணெண்ணெய் கேனுடன் பங்கேற்றனர்.

இவர்களில் விவேகானந்தன், தனம் ஆகியோர் உடனடியாக தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் பிடித்து உடலில் தண்ணீர் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். அத்துடன் முத்துமாரி என்பவர், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றும் முன்பாகவே கேனை பறிமுதல் செய்தனர். இவ்வாறு சமயோசிதமாக போலீசார் செயல்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மூவரும், தங்களது சொந்த பிரச்னை காரணமாக இவ்வாறு தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர் மூவரிடம் இருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

 இவர்களில் வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் விவேகானந்தன் (31) என்பவர் அளித்த மனு: 1992ம் ஆண்டு செங்கோட்டை தாலுகா குறிஞ்சி நகரில் எனது தந்தை பொன்னுசாமிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 2 சென்ட் நிலத்திற்கு குறிஞ்சி நகரைச் சேர்ந்த வேறு ஒருவர் உரிமை கொண்டாடுகிறார். எனவே, அவரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வால்பாறை புதுப்பாடியைச் சேர்ந்த தனம் அளித்த மனுவில் கடந்த 2002ம் ஆண்டு டிச. 27ம் தேதி ஆண்டு கடையநல்லூர் அருகே ஊர்மேலழகியானை சேர்ந்த பூவலிங்கம் என்பவருடன் தனக்கு திருமணம் நடந்ததாகவும், இரு குழந்தைகள் உள்ள நிலையில் தன்னை விட்டு கணவர் பிரிந்து வாழ்வதால் ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் ஆலங்குளம் தாலுகா துத்திகுளத்தைச்  சேர்ந்த சுப்பு கனி என்பவரின் மகன் முத்துமாரி, தனது சகோதரர் சின்னச்சாமியுடன் சேர்ந்து அளித்த மனுவில் பிரானூர் பார்டரில் உள்ள தங்களுக்கு சொந்தமான குடும்பச் சொத்தை ஆலங்குளம் ராஜபாண்டி பிரானூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 5 பேர் பத்திரப்பதிவுசெய்துவிட்டு பணத்தை தர மறுப்பதாகவும், எனவே அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kerosene Cane ,Little Day , Tenkasi: Three people with kerosene cans set fire to a public grievance day meeting held at the Tenkasi Collector's office.
× RELATED சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு...